×

மானாமதுரை- விருதுநகர் வழித்தடத்தில் கூடுதல் ரயில்கள் இயக்க பயணிகள் கோரிக்கை

மானாமதுரை: மானாமதுரை-விருதுநகர் வழித்தடத்தில் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் – மானாமதுரை இடையே 67 கி.மீ தூர மீட்டர்கேஜ் பாதையை ரூ. 135 கோடி செலவில் அகல ரயில் பாதையாக மாற்றும் திட்டம் கடந்த 2008ம் ஆண்டில் துவங்கி 2013 ம் ஆண்டு மார்ச்சில் பணிகள் முடிக்கப்பட்டபின் செப்டம்பர் 7ம் தேதி முதல் திருச்சியில் இருந்து காரைக்குடி வழியாக மானாமதுரை வரை செல்லும் டெமு ரயில் விருதுநகருக்கு நீட்டிக்கப்பட்டது. அதே போல செங்கோட்டை சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் மானாமதுரை வழியாக வாரத்திற்கு மூன்று முறை இயக்கப்படுகிறது. இது தவிர பாண்டிச்சேரியில் இருந்து கன்னியாகுமரிக்கு (வண்டி எண்.16862) வாராந்திர ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில்களை தவிர இந்த மார்க்கத்தில் வேறு ரயில்கள் இயக்கப்படவில்லை. நெல்லை, தூத்துக்குடி, கேரளா பகுதியில் இருந்து வரும் சரக்கு ரயில்கள் ஸ்டேஷன்களில் பிற ரயில்களுக்காக கிராசிங்கில் காத்து இருக்காமல் விருதுநகர் மானாமதுரை வழியாக சென்னைக்கு செல்கிறது. சரக்கு ரயில்களை தவிர வேறு ரயில்கள் இயக்கப்படாததால் மானாமதுரை வழியாக அருப்புக்கோட்டை, விருதுநகர் பகுதிகளுக்கு செல்ல வேண்டிய மக்களுக்கு போதிய ரயில் வசதி இல்லை. இதனால் மானாமதுரையை சுற்றியுள்ள நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை அருகில் உள்ள கிராம மக்கள் தங்கள் தேவைகளுக்காக பஸ்களையே நம்பி உள்ளனர். அதே போல சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் திருச்செந்தூர், தூத்துக்குடி, செங்கோட்டை செல்வதற்கு மதுரைக்கு போய் அங்கிருந்து ரயிலிலோ, பஸ்சிலோ செல்லவேண்டிள்ளது. இதையடுத்து இப்பாதையில் கூடுதல் ரயில்களை தினமும் இயக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் சண்முகம் கூறுகையில், ராமேசுவரம் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் மதுரை, விருதுநகர் வழியாக கன்னியாகுமரி செல்கிறது. மானாமதுரை-விருதுநகர் வழியாக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கினால் பயணநேரமும், பஸ்கட்டணமும் குறையும். மானாமதுரையில் இருந்து கொல்லம், செங்கோட்டை, திருச்செந்தூர் பகுதிகளுக்கு ரெயில்விட வேண்டும். மீட்டர்கேஜ் பாதை இருந்தபோது ஓடிய சென்னை-கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலை மானாமதுரை-விருதுநகர் வழியாக இயக்கவேண்டும். மேலும் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து வரும் பல எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மதுரை, திண்டுக்கல், திருச்சி வழியாக சென்னை செல்கிறது. கன்னியாகுமரி- மதுரை இடையே இருவழிப்பாதை அமைக்கும் பணி முழுமையடையாமல் தாமதமாக நடப்பதால் ரயில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து விட்டது. இந்த ரயில்களில் சிலவற்றை விருதுநகர் மானாமதுரை மார்க்கமாக இயக்கினால் மிகவும் குறைந்த தூரத்தில் மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி, சென்னை செல்ல வாய்ப்புள்ளது என்றார்.

The post மானாமதுரை- விருதுநகர் வழித்தடத்தில் கூடுதல் ரயில்கள் இயக்க பயணிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Manamadurai- Virudunagar ,Manamadurai ,Manamadurai-Virudunagar route ,Virutunagar ,Manamadurai- Virudunagar route ,
× RELATED பஸ் விபத்தில் 9 பேர் காயம்